டெஸ்ட் டிரைவ் பார்க்கணும்; ஜீப்புடன் எஸ்கேப் ஆன வாலிபர்: வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்

By காமதேனு

வடிவேலு படத்தில் வரும் காட்சி போல் ஜீப் வாங்க வந்த டிப்டாப் ஆசாமி டெஸ்ட் டிரைவ் செல்வதாக கூறி ஜீப்புடன் ஓட்டம் பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நடிகர் வடிவேலு நடித்த ஜனனம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் பழைய இருசக்கர வாகனத்தை வாங்கவரும் போது அவரிடம் நடிகர் வடிவேலு எந்த வாகனத்தை வாங்கினாலும் அதை ஓட்டி பார்த்து வாங்க வேண்டும் என கூறுவார். உடனே அந்த நபர் இருசக்கர வாகனத்தில் டெஸ்ட் டிரைவ் செல்வதாக கூறி வாகனத்துடன் தப்பி செல்வது போல் காட்சி உள்ளது. அதே பாணியில் கார் வாங்க வந்த வாலிபர் ஒருவர் டெஸ்ட் டிரைவ் செல்வதாக கூறி 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜீப்புடன் மாயமான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை அண்ணாநகர் மேற்கு யூஆர்நகர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன். இவர் அதே பகுதியில் சாய் கார்ஸ் & கலெக்சன்ஸ் என்ற பெயரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது ஷோரூமில் கொளத்தூரை சேர்ந்த லட்சுமி, தனீஷ் உட்பட 6 பேர் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் இவரது ஷோரூமில் ஷோண்டாசிட்டி, ஷிப்ட், பொலிரோ உட்பட 20 க்கும் மேற்பட்ட பழைய கார்கள் விற்பனைக்கு உள்ளது. சௌந்தரபாண்டியின் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளதால் அவரது ஊழியர்கள் ஷோரூமை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இவரது ஷோரூமுக்கு வந்த 40 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் வழக்கறிஞர் முருகன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் தனக்கு ஒரு ஹோண்டா சிட்டி கார் தேவை என்று கேட்டதன் பேரில் அங்கிருந்த ஊழியர் தனீஷ் ஒரு காரை காண்பித்து நல்ல கன்டிசனில் இருப்பதாக கூறினார். உடனே அந்த நபர் காரில் டெஸ்ட் டிரைவ் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டதை அடுத்து ஊழியர் தனீஷ் காரில் அவருடன் சென்றார். டெஸ்ட் டிரைவ் முடிந்து கடைக்கு திரும்பிய பின்னர் அந்த நபர் ஷோரூமில் நின்றிருந்த ஒரு ஜீப்பை பார்த்து இது நன்றாக உள்ளது என்று முருகன் கேட்ட உடன், ஊழியர் தனீஷ் இது 90-ல் வெளிவந்த ஜீப் என்றும் தற்பொழுது இதனை ஆல்ட்ரேஷன் செய்து வைத்துள்ளதாகவும், இதன் விலை 8 லட்ச ரூபாய் என தெரிவித்துள்ளார். உடனே அந்த அடையாளம் தெரியாத நபர் ஜீப்பை டெஸ்ட் டிரைவ் செல்ல வேண்டும் என கேட்டதன் பேரில் ஊழியர் தனீஷ் அவருடன் ஜீப்பில் டெஸ்ட் டிரைவ் சென்றார்.

அந்த நபர் ஜீப்புடன் கொரட்டூர் 100 அடி சாலையில் உள்ள மோகன் கார்டன் திருமண மண்டபத்திற்கு சென்றார். அங்கு ஜீப்பை நிறுத்தி விட்டு ஊழியர் தனீஷ்சிடம் இது எண்ணுடைய திருமண மண்டபம் என்றும் உள்ளே சென்று மேனேஜர் அறையில் உட்காருமாறு கூறியதுடன் நான் அதற்குள் ஜீப்பில் மண்டபத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி தனீஷ் உள்ளே சென்று அமர்ந்தார். நீண்ட நேரமாகியும் ஜீப்புடன் சென்ற வாலிபர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தனீஷ் மண்டப ஊழியர்களிடம் இது குறித்து விசாரித்த போது ஜீப்பை எடுத்து சென்ற நபருக்கும், திருமண மண்டபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. உடனே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனீஷ் கடைக்கு சென்று மேலாளரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். பின்னர் கடை மேலாளர் லட்சுமி இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கார் வாங்குவது போல் நடித்து 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜீப்பை திருடிச் சென்ற டிப்டாப் ஆசாமியை தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE