கேரளத்தில் வீட்டு வாசலில் கிடந்த நாகப் பாம்பை மிதித்த சிறுவனை நோக்கி சீறிய பாம்பிடம் இருந்து நொடிப்பொழுதில் தன் மகனை தாய் மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
கேரளத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் நாகப்பாம்பு புகுந்தது. அது வீட்டின் வாசலில் கிடந்த நாகப்பாம்பை கவனிக்காமல் தாயும், மகனும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினர். அப்போது முதலில் அவரது 5 வயது மதிக்கத்தக்க மகன் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரது கால் நாகப்பாம்பின் மீதுபட்டது. அடுத்த நொடியில் நாகப்பாம்பு சிறுவனை நோக்கி படம் எடுத்தபடி நின்றது.
ஆபத்தை உணராத சிறுவன் மீண்டும் நாகப்பாம்பை நோக்கியே நகர்ந்து சென்றான். நொடிப்பொழுதில் இதைப் பார்த்த தாய் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தன் மகனை, தன் அருகில் இழுத்துக் கொண்டார். தன் மகனைக் காக்கும்வகையில் வேகமாகச் செயல்பட்ட இந்தத் தாயின் செயல் இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில் அந்தத் தாய், மகன் யார்? இது கேரளத்தில் எங்கு நடந்த சம்பவம் என்பது உள்ளிட்டத் தகவல்கள் இதுவரை தெரியவில்லை. சிசிடிவி காட்சிகள் வைரலாகி வரும் நிலையில் கேரள ஊடகத்தினரும் இந்த தைரிய லெட்சுமியை தேடிவருகின்றனர்.