தேசியக்கொடியுடன் வாகனப் பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

By கி.மகாராஜன்

குமரி மாவட்டத்தில் களியாக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடியுடன் வாகன பேரணி நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் பகுதியைச் சேர்ந்த விஷூ, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆகஸ்ட் 15-ல் மதியம் 2 மணிக்கு களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வரை இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடியுடன் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நூறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வரை இரு சக்கர வாகனத்தில் தேசியக்கொடியுடன் பேரணியாக செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

குமரி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் கண்ணன். சுதந்திர தினம் அன்று கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோயிலில் இருந்து நாகர்கோவில் வரை இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இப்பேரணியை ஒழுங்குபடுத்தி தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE