பேபி பவுடர் விற்பனையை நிறுத்துகிறது ஜான்சன் & ஜான்சன்: வெளியான அதிர்ச்சி காரணம்!

By காமதேனு

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது பாரம்பரிய டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை 2023 ம் ஆண்டில் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருக்கிறது.

ஜான்சன்& ஜான்சன் பேபி பவுடரில் குழந்தைகளுக்கு புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெடாஸ் எனும் வேதிப்பொருள் கலந்துள்ளதாகவும், இதன் காரணமாக பல குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் மீது 40, 300 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே ஜான்சன்& ஜான்சன் நிறுவனம் மீது இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வழக்குகள் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜான்சன் நிறுவனம் தனது பேபி பவுடர் விற்பனையை 2020ம் ஆண்டே நிறுத்தியது.

இந்த நிலையில் தனது அனைத்து பேபி பவுடர் தயாரிப்புகளிலும் டால்கம் பவுடருக்குப் பதிலாக சோள மாவுப்பொருளைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீண்ட கால வளர்ச்சிக்கான வணிகத்தை சிறப்பாக நிலைநிறுத்த எங்கள் போர்ட்ஃபோலியோவை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து மேம்படுத்துகிறோம். இந்த மாற்றம் காரணமாக எங்கள் தயாரிப்புகள் எளிமையாகவும், விரைந்தும் உலகளாவிய நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய உதவும்” என தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய முன்னாள் டால்க் பயனர்களின் வழக்கறிஞர் லீ ஓ டெல், "பல ஆண்டுகளாக டால்க் அடிப்படையிலான பவுடர்களை விற்பனை செய்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், தனது தயாரிப்பு பவுடர் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் ஆபத்தான புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று அறிந்த பிறகு அந்த நிறுவனம் இறுதியாக இந்த முடிவை எடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீது பேபி பவுடர் வாடிக்கையாளர்கள் தொடர்ந்த வழக்குகளுக்காக மட்டும் அந்த நிறுவனம் இதுவரை பல பில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கியுள்ளது. குறிப்பாக ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக 22 பெண்கள் தொடர்ந்த வழக்கில் 2 பில்லியன் டாலரை நஷ்டஈடாக தர நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர் விற்பனை சரிவு காரணமாக நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE