`திலீப் விஷயத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்குத் தான் நல்ல லாபம்': மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கட்சித் தலைவர்

By காமதேனு

கேரளத்தில் ஜனபக்சம் என்னும் கட்சியை நடத்திவரும் பி.சி.ஜார்ஜ் எப்போதும் சர்ச்சையாகப் பேசுபவர். அந்தவகையில் இப்போது நடிகர் திலீப் மீதான வழக்கில் அவருக்குச் சாதகமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில் இவ்விஷயத்தில் நடிகைக்குத் தான் நல்ல லாபம் என தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சர்ச்சை மனிதரான பி.சி.ஜார்ஜ், “முஸ்லிம் கடைகளில் டீ குடிக்காதீர்கள். மாற்று மதத்தினருக்கு 'டீ'யில் ஆண்மையைப் பாதிக்கும் பொருள்களைக் கலந்துகொடுக்கிறார்கள்” என போகிற போக்கில் கொளுத்திப்போட்டார். இதற்காக கைது செய்யப்பட்ட இவர், ஜாமீனில் வெளியில் வந்தார். அதன் பின்னரும் தன் பேச்சைக் குறைத்துக் கொள்ளவில்லை. “என்னை கைது செய்து பயங்கரவாதிகளுக்கு பினராயி விஜயன் பரிசு கொடுத்துள்ளார்” என்று முழங்கினார். 33 ஆண்டுகள் எம்எல்ஏ-வாக இருந்த ஜார்ஜ், கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.

மதரீதியிலான சர்ச்சைப் பேச்சுக்களால் கைதாகி வெளியில் வந்தபின்னும் தொடர்ந்து அவதூறு பேச்சுக்களை ஜார்ஜ் பேசிவந்தார். இவரது ஜன பக்‌ஷம் கட்சி பாஜக கூட்டணியில் இருக்கிறது. மத ரீதியான விமர்சனங்களை அள்ளி எறிந்துவந்த ஜார்ஜ், இப்போது சினிமா விஷயத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கேரளத்தில் ஹனிபீ டூ என்னும் படத்தில் நடித்துவிட்டு வந்த பிரபல நடிகையை, ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்தது. பல்சர் சுனில் என்னும் முக்கியக் குற்றவாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் இவ்வழக்கில் நடிகர் திலீப் கைதானார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் கேரளத்தையே உலுக்கியது.

பி.சி.ஜார்ஜி

இந்நிலையில், கோட்டயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பி.சி.ஜார்ஜிடம் நடிகர் திலீப் விவகாரம் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது, அப்போது, “நடிகையைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். அவர் தப்பிக்கொண்டார். பாலியல் சம்பவத்திற்கு பின்பு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் எதுவும் இல்லை. அந்தச் சம்பவம் லாபம்தான்!” என கூலாகச் சொன்னார்.

கூடவே, “பெண் என்ற வகையில் தனிப்பட்ட வகையில் அவருக்கு நஷ்டம் தான். நானும் வருந்துகிறேன். ஆனால், சினிமா துறையில் அவருக்கு லாபம்தான் என்று நம்புகிறேன்” எனவும் அதிரவைக்கும் கருத்தைச் சொன்னார். இதைக் கண்டித்து கேரளத்தில் மாதர் சங்கங்கள் பி.சி.ஜார்ஜுக்கு எதிராகப் போராட ஆயுத்தம் ஆகிவருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE