அசாமில் உள்ள கல்லூரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து விளையாடியுள்ளனர். இதனை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வகுப்பறையில் தகாத செயலில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான சில்சார் ராமானுஜ் குப்தா கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவ, மாணவியரின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் மாணவர்களின் நடத்தையை விமர்சித்துள்ளனர். சிலர் கல்லூரி நிர்வாகத்தையும் குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரில், நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் இருந்தனர். மாணவர்களின் செயல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அவர்களை சஸ்பெண்ட் செய்தும் அதிரடி காட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் பூர்ணதீப் சந்தா, "ஆசிரியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மாணவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. மேலும் வளாகத்தில் மொபைல் போன்களும் தடை செய்யப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இந்த செயலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களின் பெற்றோருக்கும் கல்லூரி நிர்வாகம் சம்மன் அனுப்பியுள்ளது. மாணவர்கள் கல்லூரியில் இருந்து முழுமையாக நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.