வகை வகையான உணவுகள்; 150 அரங்குகள்: மணமணக்கத் தொடங்கியது சென்னை உணவுத் திருவிழா!

By காமதேனு

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் உணவு திருவிழாவை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் மொத்தம் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில், நிறைவு நாளில் விழிப்புணர்வு நடைப்பயணமும் நடைபெறவுள்ளது. ‘சிங்கார சென்னை உணவுத் திருவிழா 2022’ கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கி இருக்கும் என்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சமையல் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் ராகி புட்டு, ராகி தோசை, முடக்கத்தான் தோசை, பிரண்டை தோசை, குதிரைவாலி, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகள் என வரை பல்வேறு விதமான பாரம்பரியமான உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உணவு கண்காட்சி , தற்போது நடைபெறுகிறது. மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 150 அரங்குகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட அனைத்து பிரபலமான உணவுப்பொருட்களும் இங்குக் கிடைக்கும். அதுமட்டுமின்றி திருவிழாவில் குழந்தைகள் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவுப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதுவும் கிடையாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE