சிதைந்துபோன எம்பிபிஎஸ் கனவு: 2-வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி எடுத்த விபரீத முடிவு

By காமதேனு

2-வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வால் இதுவரை 18க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நீட் விலக்கு கோரி தமிழக அரசு போராடி வந்தாலும் மத்திய அரசு காதுகொடுத்து கேட்பதில்லை. மத்திய அரசின் பிடிவாதத்தால் தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, நீட் தேர்வால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கொள்ளுதன்னிபட்டியை சேர்ந்த சேகர்- லட்சுமி தம்பதியின் மகள் ப்ரீத்தி ஸ்ரீ (18). இவர், கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த ப்ரீத்திக்கு கால்நடை மருத்துவத்திற்கான கட்ஆப் கிடைத்துள்ளது. எனினும் மருத்துவப் படிப்பை கனவாகக் கொண்டு செயல்பட்டு வந்தார் ப்ரீத்தி. இதனால், வேங்கம்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

கடந்த மாதம் மாணவி நீட் தேர்வு எழுதிய ப்ரீத்தி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், ப்ரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. தகவலின் பேரில் வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வால் மாணவர்களின் தற்கொலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE