இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லை; இறந்து பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தை: நல்லடக்கம் செய்த போலீஸ்

By ரஜினி

இறந்து பிறந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால், அதை குப்பைத்தொட்டியில் தந்தையே வீசிச் சென்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 8-ம் தேதி நள்ளிரவு சென்னை திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் உள்ள குப்பைத் தொட்டி அருகே சணல் பையில் இருந்து ஏதோ பொருளை நாய்கள் இழுத்துக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் சென்று பார்த்த போது அதில் இறந்த நிலையில் பிரசவமான குழந்தை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், திருவில்லிக்கெணி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த நிலையில் அடையாளம் இல்லாமல் கிடந்த பிறந்த குழந்தையின் உடலைப் பாதுகாப்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் திருவல்லிக்கேணி துணை ஆணையர் உத்தரவின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் மூலமும், குழந்தை இருந்த கை பையில் கிடைத்த விவரங்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த குழந்தை அரசு கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கவிதா என்பவருக்கு பிறந்தது எனக் கண்டறிந்தனர்.
மேலும், குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் முறையாக இறுதிச்சடங்கு நடத்த கவிதா குழந்தையை தனது கணவர் தனுஷிடம் கொடுத்துள்ளார். குழந்தை இறந்த சோகத்தில் மனவேதனையில் மது அருந்தியிருந்த தனுஷ், இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
இதன் பின் திருவல்லிக்கேணி காவல்துறையினர் குழந்தையின் உடலை மருத்துவமனையில் இருந்து திரும்பப் பெற்று கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் உறவுகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக முறையாக நல்லடக்கம் செய்தனர். திருவல்லிக்கேணி காவல் துறையினரின் இந்த செயலை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE