நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் கண்ணாமூச்சி ஆடிய வருமானவரித்துறை: சேகர்ரெட்டி வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி

By காமதேனு

சேகர் ரெட்டிக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு 2,682 கோடி ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கோடிக்கணக்கிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் கரன்சிகளையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் சேகர் ரெட்டி, மணல் ஒப்பந்தத்திற்காக 247 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதும், எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம் அப்போதைய அதிமுக அமைச்சர்களிடமிருந்து 500 கோடிக்கும் மேலாகப் பணத்தைப் பெற்று சட்டமன்ற தேர்தலில் செலவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, 2014-2018 வரையிலான காலக்கட்டத்தில் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்தின் வருமானம் 4,442 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக வருமான வரித்துறையினர் தீர்மானித்தனர். மேலும் அதற்கு வரியாக 2,682 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், வருமான மதிப்பீட்டின்போது பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தனி நீதிபதி முன் உறுதியளித்த வருமான வரித்துறை, அதற்கு மாறாகச் செயல்பட்டு, நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் கண்ணாமூச்சி ஆடியுள்ளதாகக் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வருமான வரித் துறையின் உத்தரவுகளை ரத்து செய்து, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிதாக உத்தரவுகளைப் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE