தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தன் வீட்டுச் சுற்றுச்சுவர் முழுவதும் தேசியக்கொடியை ஓவியமாக வரைந்து வைத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா என மத்திய, மாநில அரசுகள் இதை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றன. மேலும் நாட்டு விடுதலைக்காக போராடி உயிர்நீத்த வீரத் தலைவர்களும் நினைவுகூறப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை, இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணுவவீரரான அய்யலுசாமியின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த அய்யலுசாமி 1970 முதல் 1986 வரை இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இவர் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போதும் பங்கேற்றார். 1971-ம் ஆண்டு நடந்த அந்த போரினையும் நினைவுகூர்ந்து பேசுகிறார் அய்யலுசாமி.
ராணுவத்தில் இருந்த அய்யலுசாமிக்கு சிறுவயதில் இருந்தே நாட்டுப்பற்று அதிகம். அந்த நாட்டுப்பற்றே அவர் ராணுவத்தில் பணியில் சேரவும் அடித்தளமிட்டது. இந்நிலையில் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையிலும், தாய் நாட்டிற்கு மரியாதை செய்யும் வகையிலும் அய்யலுசாமி தன் வீட்டுச் சுற்றுச்சுவர் முழுவதையும் தேசியக்கொடி போல் வர்ணம் தீட்டியுள்ளார். இந்த முன்னாள் ராணுவ வீரரின் தேசபக்தியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமன்றி இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றவும் அப்பகுதி மக்களை வலியுறுத்தி வருகிறார் அய்யலுசாமி.