கெத்துக்காட்ட மின்னல் வேகத்தில் ஓட்டினர்; பற்றி எரிந்த லாரிகளில் சிக்கி 2 பேர் பலி: தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்

By காமதேனு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் இருவர் எரிந்து உயிரிழந்தனர்.

நாகர்கோயில் அருகே உள்ள வள்ளியூருக்கு, அரியலூரிலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டுள்ளது. அந்த லாரி, மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி பெல் தொழிற்சாலையிலிருந்து தூத்துக்குடிக்கு காற்றாலை பொருட்கள் ஏற்றிக் கொண்டுபோய் இறக்கிவிட்டு எதிரே வந்துகொண்டிருந்த இரு லாரிகள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தன.

இரு லாரிகளும் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று உரசியது. அதனால் நிலை குலைந்த ஒரு லாரி மாற்று சாலைக்கு சென்றது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு லாரிகளும் தீப்பற்றி மளமளவென எரிந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் காற்றாலை லாரியில் வந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரும் லாரியில் மாட்டிகொண்டு தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். டி.எஸ்.பி ராமநாதன் தலைமையிலான போலீஸார் கருகிய உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தினால் நள்ளிரவில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE