இணையத்தில் இணைந்த இதயம்: ஹைதராபாத் காதலனுக்காக இந்திய எல்லையை தாண்டிய பாகிஸ்தான் பெண்!

By காமதேனு

ஹைதராபாத்தில் உள்ள காதலனுக்கான சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பிஹாரின் சுர்சந்த் அருகே இந்திய-நேபாள எல்லைக்கு அருகே மூவரும் பிடிபட்டனர்.

பாகிஸ்தானின் பைசலாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் கலிஜா நூர். இவரும் ஹைதராபாத்தை சேர்ந்த அகமது என்பவரும் ஆன்லைனில் பழக்கமாகி காதலித்து வந்தனர். இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டது, ஆனால் அவரது பெற்றோர் அதை ஏற்கவில்லை. இதனால் நூர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வர விரும்பினார். சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரியும் அகமது, தனது சகோதரரின் உதவியுடன் நூரை நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அழைத்து செல்வதற்கு திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில் பாகிஸ்தானிலிருந்து துபாய் வழியாக நேபாளத்துக்கு நூர் வந்து சேர்ந்தார். அங்கே அகமதுவின் சகோதரன் மகமூத், நேபாளத்தை சேர்ந்த ஜீவன் என்பருடன் சேர்ந்து பிஹாரின் சுர்சந்த் அருகே உள்ள நேபாள எல்லையின் வழியாக நூரை அழைத்துக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். ஆனால், அவர்கள் எல்லையை கடக்க முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டனர்.

இது தொடர்பாக பேசிய சிதமார்ஹி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்கிஷோர் ராய், “எல்லையில் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ​​நூர் ஆதார் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சசாஸ்திர சீமா பால் எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்து பின்னர் எங்களிடம் ஒப்படைத்தது. பிறகு இவர்கள் மூவரும் உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்”என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE