தூண்டிலும், வலையும் போடவில்லை; ஆனால் மீன்களை அள்ளிக் கொடுக்கிறது: கடற்கரைக்கு திரண்ட மக்கள் கூட்டம்

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளில் கொத்து, கொத்தாக மீன்கள் கரை ஒதுங்கி வருகின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது கன்னியாகுமரி. இங்கு ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 40க்கும் அதிகமான மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவ கிராமங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்கின்றனர். வழக்கமாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்து வரும் மீன்கள் கடற்கரையில் ஏலம் விடப்பட்டு, கடைகளுக்குச் செல்லும்.

பெண்கள் தலைசுமடாகக் கொண்டு சென்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் விற்பனை செய்வார்கள். ஆனால் இப்போது மீனவ சமூகம் அல்லாத மக்களே நேரடியாக மீன் வேட்டைக்குச் செல்லும் ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடற்கரைக்குச் செல்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் கிராமத்தில் கொத்து, கொத்தாக மீன்கள் கரை ஒதுங்குகின்றன. ஆனால் இவை இறந்து ஒதுங்கவில்லை. கரையைத் தொட்டு செல்லும் இந்த மீன்களை பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் வந்து பிடித்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இவை குமரி மாவட்டத்தில் வெளமீன் எனச் சொல்லப்படும் இனத்தைச் சேர்ந்தவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதங்களில் இந்த மீன்கள் கரை ஒதுங்குவது இயல்பாகவே நடக்கும். இந்த ரக மீன்களுக்கு இந்த சீசன் நேரத்தில் கடலில் நிலவும் அதிகக் குளிர்ச்சி தாங்காது. அதனால் அவை கரையை நோக்கி வருகின்றன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE