‘சிவசேனா இப்படித்தான் துரோகம் செய்தது; விளைவையும் எதிர்கொண்டது’ - நிதீஷ் குமாரை நிந்திக்கும் சுஷீல் மோடி

By காமதேனு

பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் மீண்டும் பிஹார் முதல்வராகப் பொறுப்பேற்கிறார் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) தலைவர் நிதீஷ் குமார். பிஹார் முதல்வராக 8-வது முறையாக இன்று அவர் பதவியேற்கவிருக்கிறார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். பட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 2 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷீல் குமார் மோடி, நிதீஷ் குமாரைச் சரமாரியாக விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுஷீல் குமார் மோடி, “பாஜகவுடன் இருந்தபோது நிதீஷ் குமாருக்குக் கிடைத்த மரியாதை ராஷ்ட்ரிய ஜனதா தளத்திடமிருந்து அவருக்குக் கிடைக்கப்போவதில்லை. எங்களுக்கு அதிக சீட்கள் இருந்தபோதும் அவரையே முதல்வராக்கினோம். அவரது கட்சியை உடைக்கவும் நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “எங்களுக்குத் துரோகம் செய்தவர்களின் கட்சியைத்தான் நாங்கள் உடைத்தோம். மகாராஷ்டிரத்தில் சிவசேனாவும் இப்படித்தான் எங்களுக்குத் துரோகம் செய்தது. அதற்கான பின்விளைவுகளையும் எதிர்கொண்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி-யுமான ரவிசங்கர் பிரசாதும் நிதீஷ் குமாரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

“தனது கட்சியை நாங்கள் உடைக்க முயன்றதாகக் கூறி எங்களிடமிருந்து விலகிவிட்டார் நிதீஷ் குமார். பல முறை அவரை மத்திய அமைச்சராக்கியிருக்கிறது பாஜக. முதல்வர் பதவியும் அவருக்குக் கிடைத்தது” என்று குறிப்பிட்டிருக்கும் ரவிசங்கர் பிரசாத், “2015-ல் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொண்ட நிதீஷ் குமார் அதை முறித்துக்கொண்டது ஏன்? 2017-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது ஏன்?” என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், “பிஹார் மக்கள் அளித்த பெரும்பான்மையை நிதீஷ் குமார் அவமதிக்கிறார். நிதீஷ் குமாரின் கட்சியை உடைக்க பாஜக முயற்சித்தது என்று சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டு” என்றும் அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE