டிபி மாற்றாத தமிழ்த் திரைக் கலைஞர்கள்: மோடியின் வேண்டுகோள் புறக்கணிப்பா?

By காமதேனு

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, சமூகவலைதளப் பக்கங்களின் டிபி-யில் தேசியக் கொடியை பிற மாநிலத் திரைக்கலைஞர்கள் வைத்திருக்கும் நிலையில், ரஜினி, கமல் உட்பட தமிழ்த் திரையுலகின் முக்கியக் கலைஞர்கள் யாரும் டிபி-யை மாற்றாதது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ இயக்கத்தைக் கொண்டாடும் தருணத்தில், தேசியக் கொடியைக் கொண்டாடும் ஒரு கூட்டு இயக்கமாக ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்துவருகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரப் படமான டிபி-யில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ‘சமூகவலைதளப் பக்கங்களில் எனது புரொஃபைல் படத்தை மாற்றிவிட்டேன். நீங்களும் அதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் ட்வீட் செய்திருந்தார்.

முன்னதாக, சமீபத்திய ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மாபெரும் வெற்றியடையச் செய்யும் வகையில், ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் சுயவிவரப் படங்களில் தேசியக் கொடியை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவரது தொடர் வேண்டுகோள்களை ஏற்று அக்‌ஷய் குமார், கங்கனா போன்ற பாலிவுட் கலைஞர்கள் தங்கள் டிபி-யை மாற்றிவிட்டனர். கேரள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, உன்னி முகுந்தன் உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது டிபியாக தேசியக் கொடியை வைத்திருக்கிறார்கள். மேலும், ‘இந்தியன் என கூறிக்கொள்வதில் பெருமைக் கொள்கிறேன்’ என்கிற வாசகத்தையும் கேப்ஷனாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ்த் திரையுலகின் முக்கியக் கலைஞர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, பார்த்திபன், சிவகார்த்திகேயன், தனுஷ் என எந்தவொரு முன்னணி நடிகரும் தேசியக் கொடியை டிபியாக வைக்கவே இல்லை.

இதையடுத்து பிரதமர் பேச்சுக்கு கோலிவுட் பிரபலங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்திருக்கிறது. மறுபுறம் ஜிஎஸ்டி, பணவீக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையில் வெறுமனே டிபி-யை மாற்றுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா எனும் கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE