பாட்டி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கடத்திச் சென்ற சம்பவம் உசிலம்பட்டியில் அரங்கேறி உள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி-சத்யா தம்பதியினர். சொந்தமாக பேக்கரி நடத்தி வரும் பார்த்தசாரதிக்கு நான்கு வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தை திருமங்கலம் விளக்கு (தி. விளக்கு) பகுதியில் உள்ள அவரது பாட்டி வீரம்மாள் வீட்டில் இருந்துள்ளது. அப்போது, இன்று காலை 10 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆண், பெண் ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். பேத்தி காணாமல் போனதை அறிந்த பாட்டி அலறியுள்ளார். இது குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அக்குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், குழந்தை பணத்திற்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் கூறும்போது, "கடத்தல் சம்பவம் காலையில் நடைபெற்றுள்ளதால் குற்றவாளிகள் மாவட்டத்தை விட்டு வெளியே சென்று இருக்க வாய்ப்பு குறைவு. எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.