`டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு இனி விருது கிடையாது'- `செக்' வைத்தது தமிழக அரசு

By காமதேனு

மாநில அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற மாநில நல்லாசிரியர் விருதுக்கு டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களை பரிந்துரைக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அர்ப்பணிப்பு உணர்வுடன், சிறப்பாக, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது போல, மாநில அளவிலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளோடு கூடுதலாக புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் எத்தகைய தகுதிகள் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தனிப்பயிற்சி (டியூஷன்) எடுக்கும் ஆசிரியர்களை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட அளவில் சிஇஓ தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு மூலம், ஐந்து ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராத அளவிற்கு பணியாற்றியிருக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE