சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி நியமனம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By காமதேனு

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே, கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், சிஎஸ்ஐஆர்தலைமை இயக்குநராக ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் கலைச்செல்வி இருப்பார் என மத்தியப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதவிர அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் கவனிப்பார் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. அங்குள்ள செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும், திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்துள்ளார். சிஎஸ்ஐஆர் மையத்தில் விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கிய கலைச்செல்வி, எலக்ட்ரோகெமிக்கல் மின்சார சாதனங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 6 காப்புரிமைகளும் பெற்றுள்ளார்.

சிஎஸ்ஐஆர்தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள கலைச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பை தமிழகத்தைச் சேர்ந்த கலைச்செல்வி அடைந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். தமிழ் வழிக்கல்வி, அறிவியலை கற்றுணரத் தடையாகாது என்பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE