கனமழையால் நிரம்பி வரும் அணை: குமரியில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளிலும் நல்லமழை பெய்துவருகிறது. இந்நிலையில் குமரியில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்துவருகிறது. இன்றும் திருவட்டாறு, மார்த்தாண்டம், பூதப்பாண்டி, நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. தொடர்ச்சியான மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டமும் கணிசமான அளவுக்கு உயர்ந்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய ஜீவாதாரமான பேச்சிப்பாறை அணையின் மொத்தக் கொள்ளளவு 48 அடியாகும். இந்த அணையின் நீர்மட்டம் 42 அடியைத் தாண்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மழையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனாலேயே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அணை, கரையோர பகுதிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அணை, கரையோரப் பகுதிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE