7 வயதில் கடத்தப்பட்டு 16 வயதில் தாயைக் கண்டடைந்த மும்பை சிறுமி: கண்ணீர் வரவழைக்கும் உண்மைச் சம்பவம்!

By காமதேனு

திரைப்படங்களை மிஞ்சும் வகையிலான நம்ப முடியாத சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில்தான் அதிகம் நடக்கின்றன. குழந்தைப் பருவத்தில் கடத்தப்பட்டு பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டு வளர்க்கப்பட்ட மும்பைச் சிறுமியின் கதை அந்த ரகம்தான். மனதை கனக்கச் செய்யும் தருணங்கள் நிறைந்த உண்மைச் சம்பவம் இது.

2013 ஜனவரி 22-ம் தேதி. மும்பை அந்தேரி பகுதி. தன் வாழ்க்கையையே புரட்டிப்போடும் சம்பவம் நிகழுமென்று எதிர்பார்த்திராத 7 வயது சிறுமி பூஜா, தனது அண்ணனுடன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஹென்றி ஜோசப் டிசோஸா எனும் நபர், ஐஸ்க்ரீம் தருவதாகச் சொல்லி தந்திரமாக அச்சிறுமியைக் கடத்திச் சென்றார். திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் தங்களுக்குக் குழந்தை இல்லை என்பதால், தனது மனைவியின் சம்மதத்துடன் அச்சிறுமியைக் கடத்தியிருந்தார்.

சிறுமியை அங்கேயே வைத்திருந்தால் யாருக்கேனும் தெரிந்துவிடும் என, கர்நாடகத்துக்கு அனுப்பி அங்கு ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்கவைத்தார். பூஜாவின் பெயரை ஆன்னி டிசோஸா என்றும் மாற்றினார். பல ஆண்டுகள் கழித்து ஹென்றி ஜோசப்புக்கும் அவரது மனைவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது.

இதையடுத்து, சமீபத்தில் பூஜாவை மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்துவந்தனர். 16 வயது பதின்பருவச் சிறுமியாக மும்பைக்கு மீண்டும் வந்த பூஜாவுக்குப் பழைய நினைவுகள் அதிகம் இல்லை. தன் குடும்பத்தார் குறித்த நினைவுகளையும் மீட்டெடுக்க முடியவில்லை. ஹென்றி ஜோசப்பின் உண்மையான மகள் என்றே நினைத்துக்கொண்டிருந்தார் ஆன்னி டிசோஸா எனும் பூஜா. இத்தனைக்கும் அவரது உண்மையான பெற்றோர் வசித்த வீட்டுக்கும் ஹென்றி ஜோசப்பின் வீட்டுக்கும் இடையே சில நூறு மீட்டர்கள் தூரம்தான். அவரை சரிவர கவனிக்காமல் வீட்டு வேலைகளைச் செய்ய அந்தத் தம்பதியினர் கட்டாயப்படுத்தினர்.

இதற்கிடையே, குடிப் பழக்கம் கொண்ட ஹென்றி ஜோசப், ஒருமுறை ஆன்னி தங்கள் சொந்த மகள் அல்ல; கடத்திவரப்பட்டவள் எனும் உண்மையை உளறிவிட்டார். அப்போதுதான் பழைய நினைவுகள் கிளர்ந்தெழ, தன்னைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள அப்பெண் விழைந்தார்.

2013-ல் ‘பூஜா எனும் சிறுமியைக் காணவில்லை’ என யாரேனும் விளம்பரம் கொடுத்தார்களா என தன் தோழியுடன் இணைந்து, இணையத்தில் தேடத் தொடங்கினார். அப்போது இணையத்தில் ஒரு போஸ்டர் அவர்களின் கண்ணில் பட்டது. நான்கு தொடர்பு எண்கள் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று எண்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை எனத் தெரியவந்தது. கடைசியாக, நான்காவது எண்ணில் அழைத்தபோது ஒருவரிடம் பேச முடிந்தது.

அவர் பூஜாவின் அண்டை வீட்டைச் சேர்ந்த ரஃபீக். ஆச்சரியமடைந்த ரஃபீக் உடனடியாக வீடியோ காலில் பூஜாவிடம் பேசி அவர்தான் என அடையாளம் கண்டுகொண்டார். அத்துடன், பூஜாவின் தாயிடமும் வீடியோ காலில் பேச வைத்தார். தாயும் மகளும் செல்போன் திரையில் ஒருவரையொருவர் பார்த்து கண்ணீர் விட்டனர்.

இதுதொடரபாக, போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஹென்றி ஜோசப்பின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் பூஜாவை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பல ஆண்டுகள் கழித்து தன் வீட்டுக்குத் திரும்பிய மகிழ்ச்சியை முழுமையாக பூஜாவால் கொண்டாட முடியவில்லை. காரணம், இடைப்பட்ட காலத்தில் அவரது தந்தை இறந்துவிட்டார்.

இத்தனைக்கும் காரணமான ஹென்றி ஜோசப் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது கடத்தல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை செய்ய பணித்தல் உள்ளிட்ட புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவரது மனைவியும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.

மனித வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE