நள்ளிரவில் நடுங்க வைத்த நிலச்சரிவு: மூணாறில் புதைந்த கடைகள்!

By காமதேனு

கேரளத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழையினால் பல்வேறு வகையான அசம்பாவிதங்களினால் இதுவரை 40-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள், கடைகள் ஆகியவை மண்ணில் புதைந்தன.

கேரளத்தின் மூணாறு, புதுக்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்தப் பகுதியில் இருந்த இருகடைகள், கடையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கோவில் ஆகியவை பூமிக்கடியில் புதைந்தன. நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் சம்பவம் நடந்த பகுதியில் அருகாமையில் இருக்கும் குடியிருப்புகளைச் சேர்ந்த 141 குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமுக்கு மாற்றினர். நிலச்சரிவினால் வட்டவாடா - மூணாறு இடையேயான சாலைப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டது. இரவில் நடந்த நிலச்சரிவு என்பதால் உயிர் சேதம் இல்லை. இல்லையென்றால் அந்தக் கடையைச் சுற்றி எப்போதும் எஸ்டேட் தொழிலாளர்களின் கூட்டம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE