காவிரியில் கரைபுரளும் வெள்ளம் : அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஸ்டாலின் திடீர் விசிட்!

By காமதேனு

தொடர் கனமழை காரணமாகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் தொலைபேசியில் பேசினார்.

தமிழக-கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து வைகை, கல்லணை, மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அதிகளவில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாகக் காவிரி டெல்டா கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடமும் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி குறைகளைக் கேட்டறிந்தார். அதிகாரிகள் தரப்பில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்டவை குறித்துஅவர் கேட்டறிந்தார். முதல்வர் அடிக்கடி அரசு அலுவலகங்கள், கண்காணிப்பு மையங்கள் என திடீர் விசிட் செய்து ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE