மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் அதிரடி கைது

By காமதேனு

மருத்துவர்கள் பரிந்துரை இன்றி போதை உணர்வளிக்கக்கூடிய நரம்பியல் நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வருகிறது 'மதுரா மெடிக்கல் சென்டர்' என்ற மருந்தகம். இதன் அருகில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை கடிதங்கள் இன்றி அல்ப்பிரசோலம் (Alprazolam) என்ற நரம்பியல் நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், அந்த மாத்திரைகளைக் கொண்டு இளைஞர்கள் போதை உணர்வுக்கு அடிமையாவதாகவும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் தெப்பக்குளம் காவல்துறையினர் மற்றும் மருந்து ஆய்வாளர் குழுவினர் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கடையில் இருந்த குறிப்பிட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளர் தங்கராஜை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தொடர்ந்து இந்த மருந்தகத்தில் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதித்த காவல்துறையினர் கடையை அடைக்க உத்தரவிட்டனர். உத்தரவின் பேரில் கடை அடைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE