சுதா மருத்துவமனைக்கு வைத்த சீல் செல்லும்; தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி!

By காமதேனு

ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றப் பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஈரோடு சுதா மருத்துவமனை 16 வயது சிறுமியின் வயதை மாற்றி கருமுட்டை எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மருத்துவமனையின் பதிவை ரத்து செய்ததுடன், அந்த ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை எதிர்த்து சுதா மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மருத்துவமனையில் அளித்த விளக்கத்தை ஏற்றும், அரசு தரப்பில் அளித்த விளக்கத்தை நிராகரித்தும் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்குநர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தலைமை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில், “பொது நலன் கருதியும் விதிமீறலைக் கருத்தில் கொண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனை தரப்பில், “35 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறோம். இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக்கூடாது” எனத் தெரிவித்தனர்.

இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி, “அரசு உத்தரவில் எந்த தவறும் இல்லை. விதி மீறல்களுக்கு முரணாகச் செயல்பட்ட காரணத்தினால் மட்டுமே மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி சீலை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE