தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு கல்லூரிப் பேராசிரியரை மாணவர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு கணிதத்துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர் ஒருவர், சக வகுப்புத்தோழியைக் காதலித்துள்ளார். ஆனால் படிக்கும் வயதிலேயே காதலில் கவனம் செலுத்தினால் கல்வி கெட்டுவிடும் என கணிதத்துறை தலைவரும், பேராசிரியருமான சிவசங்கரன் கண்டித்துள்ளார். கூடவே காதலில் ஈடுபட்ட மாணவன், மாணவியின் பெற்றோர்களிடம் இதைப்பற்றி சொல்லி எச்சரித்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த மாணவன், தன் நண்பர்கள் மூன்றுபேருடன் கணிதவியல் துறைக்கே சென்று பேராசிரியர் சிவசங்கரனை கொடூரமாகத்தாக்கினர். காயம் அடைந்த சிவசங்கரன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நிர்மலா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீது கோவில்பட்டி மேற்குக் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அத்துமீறியதாகவும் மாணவர்கள் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பேராசிரியர் சிவசங்கரனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.