வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
தற்போது 0.5 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக இருந்தது.
நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வதன் காரணமாக வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி இரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜூன் மாத சில்லறை நுகர்வோர் பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளதால், தற்போது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டம் கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக வட்டி விகித உயர்வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.