`உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?'- சவுக்கு சங்கர் விளக்கமளிக்க நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு

By கி.மகாராஜன்

யூடியூப் சேனலில் ‘உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் மூழ்கியுள்ளது’ என கருத்து தெரிவித்ததற்காக ஏன் உங்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்குமாறு சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் அவரது தீர்ப்புகளை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டார். இதற்காக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரை செய்தார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிந்து குற்றச்சாட்டு காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அவர் அரசிடமிருந்து பிழைப்பூதியம் (பணியிடை நீக்கம் பெற்றவருக்கு அளிக்கப்படும் சம்பளம்) பெற்று வருகிறார். அவருக்குப் பிழைப்பூதியமாக எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், மாதம் ரூ.43 ஆயிரம் வீதம் 13 ஆண்டுகளாக தற்போது வரை சுமார் ரூ.65 லட்சம் சவுக்கு சங்கருக்கு பிழைப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், சவுக்கு சங்கர் 22.7.2022-ல் யூடியூப் சேனல் ஒன்றில், ‘உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் மூழ்கியுள்ளது’ என கருத்து தெரிவித்துள்ளார். இதற்காக ஏன் உங்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து சவுக்கு சங்கர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE