புகார் அளித்தவரையே கைது செய்தது போலீஸ்: 10 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு!

By காமதேனு

குடும்பப் பிரச்சினை தொடர்பாக அளித்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரையே கைது செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அவனேஷ் குமார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், குடும்ப பிரச்சினை காரணமாகத் தனது மகனை அவரது மாமனார், மைத்துனர் உள்ளிட்டோர் தாக்கியதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும், ஆனால், தமது புகார் குறித்து விசாரணை எதுவும் நடத்தாமல் எதிர்த்தரப்பு அளித்த பொய் புகாரில் தமது மகனை ஒரு தீவிரவாதியைப் போலக் கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், ”இந்த விவகாரத்தில் அண்ணா நகர் சரக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் குணசேகரன் மற்றும் அரும்பாக்கம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ஜகதீசன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இழப்பீடாகப் புகார்தாரருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இந்த தொகையைக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமே வசூலிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது. மேலும், அப்போதைய அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு உள்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE