கொடைக்கானல்- பெரியகுளம் மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக குருடிகாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மாற்றுப்பாதையைப் பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பிரபல சுற்றுலாத்தலமான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் செல்லக்கூடிய அடுக்கம் சாலையில் குருடிகாடு என்று பகுதியில் நேற்று இரவு தொடர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, இன்று அதிகாலை அச்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு பல மணி நேரமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலை கிராமங்களுக்குச் செல்லக்கூடிய மிக முக்கியமான சாலை என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மழை பெய்து வருவதன் காரணமாக சீரமைப்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில், சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையைப் பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.