தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகம்; கும்பல் தலைவனுக்கு தெரிந்தது உண்மை: பயத்தில் உயிரை மாய்த்த திருடன்

By ரஜினி

சென்னையில் ஆட்களை ஏவி வழிப்பறி நாடகமாடியது தெரியவரவே பயத்தில் திருடன் தற்கொலை செய்து கொண்டான். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குட்டு அம்பலமாகியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிசா பேகம் தெரு பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (41). இவர் கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை திருவல்லிக்கேணி ஓ.வி.எம் தெருவில் உள்ள விடுதியில் நண்பரை சந்தித்துவிட்டு ஒரு லட்சம் பணம், 69 கிராம் தங்கக்கட்டியுடன் அங்கிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சாகுல் ஹமீதை வழிமறித்து கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த பணம், தங்கக்கட்டி, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றன.

இதில் படுகாயமடைந்த சாகுல் ஹமீது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் திருவல்லிகேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (21), சௌக்கார்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ் (24), போஸ்கோ (24), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சாமியா ஹுமாயூன் (32), ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கைது செய்யப்பட்ட 5 பேரை வைத்துதான் சாகுல் ஹமீது வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றிய அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், சாகுல் ஹமீது குருவியாக செயல்பட்டு வந்ததும், கரோனா காலத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையை சமாளிக்க வழிப்பறி நாடகத்தை சாகுல் ஹமீது அரங்கேற்றியதும் காவல்துறைக்கு தெரியவந்தது. பின்னர் சாகுல் ஹமீது திருவல்லிக்கேணியில் தனது நண்பர் தங்கியிருந்த விடுதியில் பதுக்கி வைத்த பணம், தங்கக்கட்டி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாகுல் ஹமீது திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழிபறி நாடகம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் விசாரணைக்கு பயந்து சாகுல் ஹமீது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உறவினர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று சாகுல் ஹமீது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சாகுல் ஹமீதை கொள்ளைக்கும்பல் தலைவன் மிரட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட பயத்தில் சாகுல் ஹமீது தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னரே சாகுல் ஹமீது தனது தலைவன் அச்சுறுத்தலுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது காவல்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பது பற்றி தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE