கடலூரில் இருந்து குற்றாலம் நோக்கி சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மினி பஸ் மதுரை அருகே விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்த நிலையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பின்புறம் உள்ள மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி மீது மினி பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மினி பஸ் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு 18 பேர் சுற்றுலாவிற்காக அந்த மினிபஸ் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும், விபத்தில் மினி பஸ் ஓட்டுநர் பிரபு என்பவரும் ,வேனில் பயணம் செய்த சௌந்தர் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை மீட்புத் துறையினர் விபத்தில் காயமடைந்த ஐந்துக்கும் மேற்பட்டோரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றிய ஒத்தக்கடை காவல்துறையினர், உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.