கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

By ரஜினி

சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் வேலூரைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தக் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நெருங்கிய தோழிகளான இருவரும் மாணவர்களிடம் சகஜகமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இருவரையும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவறானவர்களாகக் கருதி அவர்களிடம் யாரும் பேசாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த இரு மாணவிகளில் ஒருவர் நேற்று மாலை கல்லூரி லேப்பில் இருந்து மெர்குரிசல்பேட் என்ற மருந்தை கொண்டு வந்து விடுதி அறையில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது நெருங்கிய தோழியான மற்றொரு மாணவியும், ' நீ இல்லாத உலகத்தில் நானும் இருக்க விரும்பவில்லை' எனக் கூறி அதே மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அங்கு வந்த மற்றொரு மாணவி, அறையில் இரு மாணவிகளும் மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து இருவரும் நலமுடன் உள்ளனர்.

தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், தங்களை மோசமானவர்கள் என்று கூறி சக மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் தங்களிடம் பேசாமல் ஓதுக்கி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் இது குறித்து சம்பந்தபட்ட மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து வேப்பேரி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE