பெண் தாசில்தார் குற்றவாளி; இது ஆரம்பம்தான்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை நீதிபதி எச்சரிக்கை

By காமதேனு

ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதி அவரை நேரில் ஆஜராகவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முருகன் என்பவர் 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 2017 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவு 4 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்படாமல் இருப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்கப் போவதாக கூறினர்.

அப்போது, இரண்டு நாட்களில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்ததோடு, தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக அவரை ஆகஸ்ட் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE