நேரு உள்விளையாட்டு அரங்கில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பாதுகாப்பு பணியிலிருந்த போது நடந்த சோகம்

By காமதேனு

நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கடந்த 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அத்துடன் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இவ்விழாவில் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி நான்காயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 10-ம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி, செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழாவிற்கு ஏற்பாடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்விற்காகக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணிச் சுமை காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பத் தகராறு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE