ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றாத நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க 60 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார் 12 வயது சிறுமி.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள அன்னபள்ளம் கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதில் 5 ஏக்கர் பரப்பளவில் வீடுகள் மற்றும் விளை நிலங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புவனேஸ்வர் என்பவரின் மகள் செம்மொழி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதி ஆக்கிரமிப்புகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க 60 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணித்து மனு அளிக்கச் சென்றுள்ளார்.
இன்று காலை லேசான தூரல் பெய்து கொண்டிருந்த நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்று கொண்டிருக்கிறார் சிறுமி. “எங்கள் பகுதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க செல்கிறேன். என்னுடைய மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சென்னை கோட்டைவரை சென்று முதல்வரிடம் மனு கொடுக்க தயாராக இருக்கிறேன்” எனச் சொல்கிறார் அந்த மாணவி.