இந்தியாவில் குரங்கு அம்மை பரவலைக் கட்டுப்படுத்த வல்லுநர் குழுவை அமைத்திருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இக்குழு முடிவெடுக்கும். அதேசமயம், வேறு யாருக்கும் குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அவர்களில் 5 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். குரங்கு அம்மை மேலும் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும், தொற்றுக்குள்ளானோருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், “குரங்கு அம்மை புதிய நோயல்ல என்பதால் அதுகுறித்து பீதியடைய வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அனைவருக்கும் குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்துவதை உலக சுகாதார நிறுவனம் இன்னும் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குரங்கு அம்மை வைரஸ், பெரியம்மையுடன் தொடர்புடையது என்பதால் பெரியம்மை தடுப்பூசியைத்தான் தற்போது பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். எனினும், பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்ட தடுப்பூசியால் இப்போது பலன் ஏற்படுமா என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.
இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா பிரிவின் இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், “சமீபத்தில் சில நாடுகளில் குரங்கு அம்மைக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அவை குறைந்த அளவில்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில நாடுகள் பெரியம்மை தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலித்துவருகின்றன. உரிய வழிகாட்டுதல்களுடன் அதைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பெரியம்மைக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் குரங்கு அம்மைக்கான தடுப்பூசியாகப் பயன்படுத்தலாம் எனப் பரிசீலிக்கப்படுகிறது.
“அங்காரா பவேரியன் நார்டிக் திரிபு (எம்விஏ - பிஎன்) வைரஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் குரங்கு அம்மை தடுப்பூசிக்குத் தற்போது அமெரிக்கா மற்றும் கனடா அரசுகள் ஒப்புதல் வழங்கியிருக்கின்றன” என்றும் பூனம் கேத்ரபால் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் பேசிய குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர், இந்தியாவில் தற்சமயம் பெரியம்மைக்கான தடுப்பூசி கைவசம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். “1980-களின் தொடக்கத்திலேயே குழந்தைகளுக்குப் பெரியம்மை தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தக் காலகட்டத்தில் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. அத்துடன், அந்தத் தடுப்பூசியால் ஏற்படும் ஒவ்வாமை அதிக வேதனை தரும் வகையில் இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
2019-ல், ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் மூலம் உருவாகும் பெரியம்மை, குரங்கு அம்மை உள்ளிட்ட நோய்களுக்கான JYNNEOS எனும் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்று மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) அங்கீகாரம் வழங்கியது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவும் அனைவருக்குமான தடுப்பூசி அல்ல. குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களுடன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் போன்றோருக்குத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, பிரேசில், கனடா, சைப்ரஸ், காங்கோ, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு JYNNEOS தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கரோனா வைரஸை எதிர்கொண்ட அனுபவம், குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதிலும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.