அறக்கட்டளைக்கு வந்த பெண்களுடன் உல்லாசமாகச் சுற்றியதைக் கண்டித்த மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் மதுக்கர் துக்கிரில்லா(60). இவரது மனைவி ஷோபா(57). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அமெரிக்காவில் வேலை பார்த்த மதுக்கர், கடந்த 2002-ம் ஆண்டு சென்னை திரும்பியதும் சேத்துப்பட்டில் குடியேறினார்.
இந்நிலையில், மதுக்கர் தனது வீட்டிலேயே புட்டபர்த்தி சாய்பாபா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த அறக்கட்டளைக்கு இளம்பெண்கள் அதிகமாக வரத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கு வரும் பெண்களிடம் பூஜை செய்வதாகக் கூறி மதுக்கர், பல பெண்களுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். அதுபோல் அறக்கட்டளைக்கு வரும் பெண்களை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிவந்துள்ளார். இந்த தகவல் மனைவிக்குத் தெரியவந்ததால், அவர் கணவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் அந்த பெண்களுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை வெடித்து வந்தது. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மதுக்கர் துக்கிரில்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுக்கர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், வழக்கு சென்னை எழும்பூர் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு மதுக்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை மாநகர 2-வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுக்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ப்ளோரா ‘கீழமை நீதிமன்றத்தில் வழங்கிய 6 மாதம் சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தினார். இதையடுத்து மதுக்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.