காமன்வெல்த் போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு மூன்று ஆண்டுகள் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பிர்மிங்காஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தியா தரப்பில் 215 பேர் கொண்ட அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இருக்கும் இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது. இந்த காமன்வெல்த் தொடரில் 200 மீட்டர் தடகளம் மற்றும் ரிலே போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் கலந்துகொள்ள இருந்தார். போட்டி நடைபெறுவதற்கு முன்பாக அனைத்து நாடுகளின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தனலட்சுமி சேகர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது.
ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இந்நிலையில் தனலட்சுமி சேகர் தனது தவறை ஒப்புக்கொண்டதாகக் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தடையை மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி, தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் யாராலும் முறியடிக்கப்படாத பி.டி.உஷாவின் சாதனையை 23 ஆண்டுகள் கழித்து தனலட்சுமி தகர்த்து எறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.