கொதிக்கும் கூழ் அண்டாவிற்குள் விழுந்த வாலிபர்; பறிபோன உயிர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

By காமதேனு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கொதிக்கும் கூழ் அண்டாவிற்குள் வலிப்பு வந்ததால் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதறவைத்துள்ளது.

ஆடி மாதத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் கூழ் காய்ச்சும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 29-ம் தேதி மதுரை பழங்காநத்தம் மேலத்தெருவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேர்த்திக்கடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் தயாரிக்கப்பட்டது.

அண்டாவிற்குள் விழுந்த முத்துக்குமாரை காப்பாற்றிய நபர்கள்

அப்போது, கூழ் காய்ச்சும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற முருகன் ஈடுபட்டிருந்தார். அச்சமயம், அவருக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறிய முத்துக்குமார் கொதிக்கும் கூழ் அண்டாவினுள் விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், 65%-க்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இவர் கூழ் அண்டாவிற்குள் விழுந்த சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி அனைவரையும் பதறவைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE