மூக்குவழி கரோனா தடுப்பு மருந்து: எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

By காமதேனு

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களும் முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. அதேசமயம், ஊசி மூலம் செலுத்தப்படுவதால் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுபவர்களும் உண்டு. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில், மூக்கு வழியாகத் தெளித்து உட்செலுத்தும் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கிறது பாரத் பயோடெக் நிறுவனம்.

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது மூக்குவழி கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பின் இறுதிக்கட்டத்தைத் தாண்டியிருக்கிறது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், சோதனை முறையில் 4,000 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டிருக்கிறது என இந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்திருக்கிறார். அவர்களில் ஒருவருக்குக்கூட பக்கவிளைவுகளோ, ஆபத்தான அறிகுறிகளோ ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

குஜராத்தின் அங்கலேஷ்வரில் இயங்கிவரும் பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனம், கரோனா தடுப்பூசி மட்டுமல்லாமல், குரங்கு அம்மைக்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது. உலகிலேயே இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் இரண்டாவது நிறுவனம் இது. ஜெர்மனியின் பவேரியன் நார்டிக் பகுதியில் உள்ள தடுப்பூசி நிறுவனமும் குரங்கு அம்மைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், மூக்கின் வழியாக பூஸ்டர் டோஸாகச் செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கான உரிமம் இந்த மாதமே (ஆகஸ்ட்) கிடைத்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிருஷ்ணா எல்லா, “ஊசி மூலமும், மூக்கின் வழியாகவும் செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் மூலம் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். எந்த வகையான வைரஸ் திரிபுகள் வந்தாலும் நம்மால் எதிர்கொள்ள முடியும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தடுப்பூசியைவிட சிறந்தது

ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்து ஓரளவுக்குத்தான் பலனளிக்கும்; அதனால்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும்கூட தொற்று உறுதிசெய்யப்படுகிறது எனத் தெரிவித்திருக்கும் அவர், மூக்கின் வழியாகச் செலுத்தப்படும் தடுப்பு மருந்து முழு உடலுக்கும் பாதுகாப்பு அளிக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிஏ.5 வைரஸ் திரிபு தடுப்பூசியையும் கடந்து தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இந்தியாவில் இந்தத் திரிபின் பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE