கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் உள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கிய காட்டுயானை, ஆற்றிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்திலும் கனமழை தொடர்கிறது. இங்குள்ள சாலக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள யானையால் வெள்ளத்தை கடந்து கரைக்கு வரமுடியாமல் தவித்து வருகிறது. கனமழை மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறையினரும் யானைக்கு உதவ முடியாமல் தவித்து வருகின்றனர்.
கேரளாவில் கனமழை நீடிப்பதால் பத்தனம் திட்டா, ஆழப்புழா, கோட்டயம், பாலக்காடு, எர்ணாக்குளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்றும் , நாளையும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.