தொடர் போராட்டம் எதிரொலி: சர்ச்சை ஆட்சியர் அதிரடியாக மாற்றம்

By காமதேனு

எதிர்கட்சிகளின் தொடர்ச்சியான போராட்டங்களினால் கேரள மாநிலம், ஆழப்புழா ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராம் வெங்கிடராமன் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவர் இப்போது உணவுப்பொருள் வழங்கல்துறை பொதுமேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீராம் வெங்கிடராமன் இந்திய அளவில் குடிமைப்பணித் தேர்வில் இரண்டாம் இடத்தில் தேர்வு பெற்றார். சிறிதுகாலம் தேவிகுளம் சார் - ஆட்சியராகவும் இருந்தார். கடந்த 2019 ஆகஸ்ட் 3-ம் தேதியன்று குடிபோதையில் ஸ்ரீராம் வெங்கிடராமன் ஓட்டி வந்த கார் மோதி பத்திரிகையாளர் பஷீர் உயிர் இழந்தார்.

அப்போது காரில் ஸ்ரீராம் வெங்கிடராமனுடன், அவரது பெண் தோழி வாபா பெரோஸும் இருந்தார். அந்தக் கார் வாபா பெரோஸுக்குச் சொந்தமானது. இந்த சம்பவம் கேரளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பத்திரிகையாளர்களையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது. இருந்தும் காரை ஓட்டியது ஸ்ரீராம் வெங்கிடராமனா? அவரது தோழி வாபா பெரோஸோ என இன்றும் இருவேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து சம்பவத்தின்போது, திருவனந்தபுரத்தில் நில அளவைத்துறை இயக்குனராக இருந்தார் ஸ்ரீராம் வெங்கிடராமன். அவர் பதவியேற்று இரண்டே நாளில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்வை உருவாக்கியது. அந்தவகையில் சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமனுக்கும், ஆலப்புழா ஆட்சியராக இருந்த ரேணுராஜுக்கும் சிலவாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ரேணுராஜ் கடந்த 2014-ம் ஆண்டு குடிமைப்பணிக்குத் தேர்வானவர் ஆவார். கோட்டயத்தை பூர்வீகமாகக் கொண்ட ரேணுராஜ், இதற்குமுன்பு திருச்சூரில் சார்- ஆட்சியராக இருந்தார். தேவிகுளத்தில் சார்- ஆட்சியராக இருந்தபோது, ரேணுராஜ், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மிகவும் பரவலாக கவனம் ஈர்த்தது.

சாலைவிபத்தில் பத்திரிகையாளர் மரணத்திற்கு காரணமான ஸ்ரீராம் வெங்கிடராமன் கேரள சுகாதாரத்துறையில் இருந்தார். கடந்த 23-ம் தேதி அவரை ஆழப்புழா ஆட்சியராக நியமித்து உத்தரவிட்டது கேரள அரசு. ஆழப்புழாவில் ஆட்சியராக இருந்த ஸ்ரீராம் வெங்கிட்ராமனின் மனைவி ரேணுராஜ் எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குற்றப் பின்னணி கொண்டவரை ஆட்சியராக நியமித்திருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து போராடி வந்தன. பத்திரிகையாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆழப்புழா ஆட்சியர் பொறுப்பில் இருந்து ஸ்ரீராம் வெங்கிடராமனை விடுவித்துள்ளது கேரள அரசு. அவருக்கு உணவுப்பொருள் வழங்கல்துறையின் பொதுமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ண தேஜா என்பவர் ஆழப்புழா மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE