ஒன்றல்ல, ஐந்து திருமணம்: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்யாண மன்னன்: 4-வது மனைவி காட்டிய அதிரடி

By காமதேனு

தன்னை ஏமாற்றி நான்காவது திருமணம் செய்து கொண்ட தனது கணவன், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதுடன் ஐந்தாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சீனு என்கிற தெய்வநாயகன். இவர் கடலூர் மாவட்டம் மேலுகுப்பம்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காயத்ரியை கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அப்போது கரோனா ஊரடங்கு என்பதால் பெரிய அளவில் இல்லாமல் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனாலும் காயத்ரிக்கு வரதட்சனையாக 6 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனம், பீரோ, கட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.

ஆனால் காயத்ரியுடன் ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என மூன்று மாதத்திற்கு மட்டுமே மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய தெய்வநாயகன், அதன் பின்னர் மனைவியிடம் அதிக பணம், நகை கேட்டு தொல்லை செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் காயத்ரியை அவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். தாய் வீட்டுக்கு வந்தபோது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த மனைவி காயத்ரியை அவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டபோது கூட கணவன் தெய்வநாயகன் வந்து பார்க்கவேயில்லை. அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அதையும் பார்க்க அவர் வரவேயில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த காயத்ரி கணவர் குறித்து அரியாங்குப்பம் பகுதியில் விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி அடையும் வகையில் தகவல்கள் தெரிய வந்தது. தெய்வநாயகன் ஏற்கெனவே மூன்று திருமணங்கள் செய்த மோசடி மன்னன் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. முதல் மனைவி அனிதா, இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவள்ளி ஆகியோரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது. காயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது 5-வதாக வேறொரு பெண்ணை தெய்வநாயகன் திருமணம் செய்துள்ளது குறித்தும் அவருக்கு தெரியவந்திருக்கிறது. அதனால் காயத்ரி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இப்படி மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு தன்னையும் ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டதோடு, ஐந்தாவதாகவும் திருமணம் செய்து கொண்டது குறித்து காயத்ரி கேட்டபோது அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் முயன்றாராம். இப்படி தன்னை ஏமாற்றியதோடு, கொலை செய்யவும் முயற்சித்த தெய்வநாயகன் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் காயத்ரி தன் பெண் குழந்தையுடன் வந்து புகார் அளித்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை ஏமாற்றி ஐந்து பேரை திருமணம் செய்து கொண்ட தெய்வநாயகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE