வர்த்தக மையம் திறப்பு விழாவுக்கு தயார்: மதுரை தமுக்கம் மைதானத்தில் `பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த முடியுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகரின் மையத்தில் உள்ள தமுக்கம் மைதானத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாள், வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக, அவர்களுக்காக தமுக்கம் விளையாட்டு மைதானத்தை உருவாக்கினார். அங்கு போர் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதோடு மட்டுமில்லாது யானைப் பந்தயம், குதிரைப் பந்தயம், ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம், கத்திச் சண்டைகள் போன்றவீர விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. அதற்குபிறகு ஆட்சி செய்தவர்களும் இந்த விளையாட்டு மைதானத்தை சிறப்பாக பராமரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த மைதானம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் போதிய வருவாய் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டாகவே நிதி நெருக்கடியில் உள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதற்கு கூட நிதி இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களுக்கான சாலை வசதி, சுகாதார வசதிகளை கூட செய்து கொடுக்க முடியவில்லை. அதனாலே, தற்போது பெய்யும் தென்மேற்கு பருவமழையால் மதுரை சாலைகள் சேறும், சகதியுமாக மக்கள், வாகன ஒட்டிகள் பரிதவிக்கின்றனர்.

அதனால், மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்தும் வகையில் வருவாய் இனங்களை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் சென்னை வர்த்தக மையம்(Trade Center) போல் 45.55 கோடியில் வர்த்தக மையம் (convention center) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் வர்த்தக மையம் அறிவித்தபோது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்புகளை கடந்து தற்போது வர்த்தகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது. நகரின் மையத்தில் தமுக்கம் மைதானம் உள்ளதால் இந்த இடத்தில் வர்த்தக மையம் அமைந்துள்ளதால் தனியார் நிறுவனங்கள் வணிக சந்தைகள், பொருட்காட்சி நடத்துவதற்கு எதுவாக இருக்கும். இதற்கு முன் தமுக்கம் மைதானத்தில் ஒரு நாளைக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 30 ஆயிரம் வாடகைக்குவிடப்பட்டு வந்தது. தற்போது லட்சக்கணக்கில் வருவாய் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதனால், மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமுக்கம் மைதானத்தில் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் குறைந்தப்பட்சம் 300 கார்கள், 1,000 இரு சக்கர வாகனங்களில் வருவார்கள். தற்போதே தமுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தமுக்கம் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்காக வரும் வாகனங்களையும் சேர்த்தால் அப்பகுதியில் போக்குரவத்து ஸ்தம்பிக்க வாய்ப்புள்ளது. அதனால், வர்த்தக அமைப்பதோடு மாநகராட்சி தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், இந்த வர்த்தக மையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தவும், அவர்கள் தடையின்றி எளிமையாக நகர்ப்பகுதியில் வந்து செல்லவும் பார்க்கிங் வசதி, விசாலமான சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE