‘நீங்கள் உயிரோடு இருக்க மோடிதான் காரணம்!’ - பிஹார் அமைச்சர் பேச்சு

By காமதேனு

பிஹாரில் ஐக்கிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது பாஜக. அம்மாநிலத்தின் வருவாய் மற்றும் நில சீர்திருத்தத் துறை அமைச்சரான ராம் சூரத் ராய் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். கூட்டணி அரசில் அமைச்சர் பதவி வகித்துக்கொண்டே முதல்வர் நிதீஷ் குமார் குறித்து விமர்சனம் செய்யத் தயங்காதவர்.

கடந்த மாதம், தனது துறையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவை, முதல்வர் நிதீஷ் குமார் நிறுத்திவைத்தார். அமைச்சர் ராம் சூரத் ராயின் உத்தரவுக்குப் பின்னே, பண முறைகேடு, சாதி அடிப்படையிலான பாரபட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த ராம் சூரத் ராய், மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தார். ரியல் எஸ்டேட் மாபியாக்களால் தான் பழிவாங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

ராம் சூரத் ராய்

முன்னதாக, ராணுவத்தின் ஆள் சேர்ப்புப் பணிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ‘அக்னிபத்’ திட்டத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்ட பிஹார் இளைஞர்களை பயங்கரவாதிகள் என விமர்சித்தவர் அவர். இத்தனைக்கும் இவ்விவகாரத்தில் இளைஞர்களின் பக்கம் நியாயம் இருப்பதாகவே நிதீஷ் அரசு கருத்து தெரிவித்திருந்தது.

இப்படி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் அடிபடும் வகையில் சர்ச்சைப் பேச்சுகளை உதிர்க்கும் ராம் சூரத் ராய், கரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதம் தொடர்பாகப் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசிய காணொலி தற்போது வைரலாகியிருக்கிறது.

அதில், “நீங்கள் எல்லாம் இன்றைக்கு உயிருடன் இருக்கிறீர்கள் என்றால், அது நரேந்திர மோடியால்தான். கோவிட் பெருந்தொற்றால் பாகிஸ்தானிலும் பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் அழிவுகளைப் பாருங்கள். பிரதமர் மோடியின் தடுப்பூசியாலும், பொருளாதாரத்தை அவர் கையாண்ட விதத்தாலும்தான் நீங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

முஸாஃபர்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது இவ்வாறு அவர் பேசியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,396 என சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவில் கரோனா பெருந்தொற்றால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 லட்சம் என மே மாதம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. எனினும், இதை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE