மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் அனுமதியின்றி குறும்படங்கள் எடுத்துவரப்பட்ட நிலையில், திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் போட்டோஷூட் எடுக்க கடந்த 2011-ம் ஆண்டு அரசால் போடப்பட்ட தடை தொடர்வதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது மதுரை திருமலை நாயக்கர் மஹால். தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இங்கு பல்வேறு குறும்படம் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் நடந்துள்ளது.
இச்சூழலில் திரைப்படங்கள் எடுப்பதனால் மஹாலில் உள்ள தூண்கள் சேதம் அடைவதாக கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் அளிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் படப்பிடிப்பிற்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இருப்பினும் இங்கு சிலர் அனுமதியின்றி குறும்படங்கள் எடுத்து வருவதாக தொல்லியல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் குறும்படங்கள், பெரும்படம், விளம்பரங்கள் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோஷூட் நடத்த அரசால் விதிக்கப்பட்ட நிரந்தர தடை தொடர்வதாக தொல்லியல் துறையின் மதுரை மண்டல உதவி இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.