சத்தீஸ்கரில் மேலும் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை: 10 நாட்களில் மூன்றாவது சம்பவம்

By காமதேனு

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உண்டு. ஜூலை 22-ல், சுக்மா மாவட்டத்தின் புல்பாக்டி காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜூலை 29-ல் சுக்மா மாவட்டத்தின் பிந்த்ராபானி கிராமத்தில் போலீஸாருடன் நடந்த மோதலில் ராகேஷ் மட்கம் எனும் மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது தலைக்கு 5 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அம்மாவட்டத்தின் பந்தர்பதார் பகுதியில் இன்று காலை நடந்த மோதலில் மேலும் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று அதிகாலை பந்தர்பதார் கிராமம் அருகே, பெஜ்ஜி காவல் சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் மாவட்ட அதிரடிப் படையினர் ஈடுபட்டிருந்தனர். காலை 7.30 மணி அளவில், இரு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

மோதல் முடிவுக்கு வந்ததும், அங்கு மாவோயிஸ்ட் ஒருவர் சடலமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது. முதற்கட்ட தகவல்படி, இறந்துகிடந்தவர் முக்கியமான மாவோயிஸ்ட் தலைவரான மாத்வி ஹட்மா எனத் தெரியவந்திருக்கிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பஸ்தர் பகுதி ஐஜியான சுந்தர்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 10 நாட்களில் சுக்மா மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE