தென்காசி மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிர் இழந்தார். இதில் அவரோடு கிணற்றுக்கு குளிக்கச் சென்ற நான்கு நண்பர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், வடகரையில் உள்ள ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்தவர் ரமகத்துல்லா. இவரது மகன் முகமது இப்ராகிம்(16). பத்தாம் வகுப்புவரை படித்துள்ள முகமது இப்ராகிம் உடல்நலக் குறைவினால் வீட்டில் இருந்துவந்தார். இவரது தாயும், தந்தையும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டதால் முகமது இப்ராகிம் தனது தாத்தா முகமது நயினாரின் வீட்டில் வளர்ந்து வந்தார்.
முகமது இப்ராகிம் தன் வீட்டருகே உள்ள நான்கு நண்பர்களுடன் சேர்ந்து மேக்கரை அடவிநயினார் அணை செல்லும் சாலையில் உள்ள கிணறு ஒன்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக முகமது இப்ராகிம் கிணற்றில் மூழ்கினார். அப்போது அவருடன் இருந்த நான்கு நண்பர்களும் பயந்து வீட்டுக்கு ஓடிவிட்டனர். மற்றவர்களிடம் இதுகுறித்து அவர்கள் சொல்லவும் இல்லை. இதனிடையே முகமது இப்ராகிமை காணாமல் அவரது தாத்தா முகமது நயினார் பல இடங்களிலும் தேடினார். கடைசியில் சக நண்பர்களோடு முகமது இப்ராகிம் குளிக்கச் சென்றது தெரியவந்தது. அந்தக் கிணற்றில் போய் பார்த்தபோது முகமது இப்ராகிம் சடலமாக மிதந்தார்.
செங்கோட்டை தீயணைப்பு போலீஸார், சிறுவன் முகமது இப்ராகிமின் சடலத்தை மீட்டனர். அச்சன்புதூர் போலீஸார் அவருடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் நான்குபேர் மீதும், சம்பவத்தை மறைத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு, அவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். முகமது இப்ராகிமோடு குளிக்கச் சென்ற நான்கு நண்பர்களும் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதால் அவர்களது பெயர் விவரங்களை அறிவிக்கவில்லை.