காவிரிக் கரையோரம் வெள்ள அபாய எச்சரிக்கை: செல்ஃபி எடுக்காதீர்கள் என அறிவுறுத்தல்

By காமதேனு

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் காவிரி கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே மேட்டூர் அணை 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது. அதனால் ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி குறைவில்லாமல் நடந்து வருகிறது. அணையிலிருந்து பாசனத்துக்காக சராசரியாக வினாடிக்கு 15,000 முதல் 20,000 கன அடி வரை நீர் திறக்கப் பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டு பருவமழை தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை குறைய விடாமல் அது பாதுகாக்கிறது. கடந்த மாத துவக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்ததால் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் அதிக மழை பொழிவு இருந்தது. அதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் வேகமாக நிரம்பின.

அதன் விளைவாக அந்த அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு மேட்டூருக்கு வந்தது.

அதனால் கடந்த மாத இறுதியில் மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அதையடுத்து அணைக்கு வந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டது. நான்கைந்து தினங்களுக்கு பிறகு அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் பாசனத்திற்காக மட்டும் இருபதாயிரம் கன அடி நீர் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு கடந்த இரண்டு மூன்று தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 41,000 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 42,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அதன் விளைவாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே 16 கண் மதகு உள்ளிட்டவற்றின் மூலமாக திறந்து விடப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு நேற்றைய தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என்றும், செல்ஃபி எடுக்க வேண்டாம் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE